தந்தை பெரியார் விருது
THANTHAI PERIYAR AWARD AND AMBEDKAR AWARD 2023: விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ. 5 லட்சம் ரூபாயுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும்.
சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது’’ பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுப. வீரபாண்டியன், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர், தந்தை பெரியாரின் பற்றாளர்.
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். அவர் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை முன்வைத்து, 2007 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர்.
தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அவர், கல்லூரியில் பணியாற்றும் பொழுதே தமிழ் தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டவர். தந்தை பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவு முதலான கருத்துகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
சுப. வீரபாண்டியன் கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன், இதுவரை 54 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது
THANTHAI PERIYAR AWARD AND AMBEDKAR AWARD 2023: “டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது” பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள பி. சண்முகம், தமிழ்நாட்டில் 32 ஆண்டுகாலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பணிவகித்து மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளார்.
மேலும், தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதி பெற்று தந்ததில் பெரும்பங்காற்றியுள்ளார்.
வாச்சாத்தி – உண்மையின் போர்க்குரல், வாச்சாத்தி வன்கொடுமை போராட்டம் – வழக்கு – தீர்ப்பு, தீக்கதிர் நாளிதழில் வனமக்கள் வாழ்க்கை வளம்பெற, வனங்களை பாதுகாப்பது மக்களே போன்ற செய்தி தொகுப்புகளையும் சண்முகம் எழுதியுள்ளார்.